மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் வேதனை:உணவில் விஷம் கலந்து 4 குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி


மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் வேதனை:உணவில் விஷம் கலந்து 4 குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 12 Dec 2019 4:54 PM GMT)

மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் உணவில் விஷம் கலந்து 4 குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). டிரைவர். இவருடைய மனைவி அம்சவேணி (37). இவர்களுக்கு சவுமியா (16), சத்யபிரியா (13) ஆகிய 2 மகள்களும், மணிகண்டன் (10), சபரிகிரிநாதன் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கோவிந்தராஜ் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகே தியாகி குமரன் வீதியில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். சவுமியா உள்பட 4 பேரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் 2-வது மகள் சத்யபிரியா நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை கோவிந்தராஜ், அம்சவேணி ஆகியோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனால் மருத்துவ செலவுக்கு அதிகளவு பணம் தேவைப்பட்டது. இதனால் அம்சவேணி மிகவும் மனவேதனை அடைந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் சொந்த ஊரில் உறவினர் ஒருவர் இறந்ததால் கோவிந்தராஜ் அங்கு சென்றார். வீட்டில் அம்சவேணி தனது 4 குழந்தைகளுடன் இருந்தார். அப்போது சத்யபிரியாவுக்கு உடல்நிலை சரியில்லாதது மற்றும் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததாலும் மிகுந்த வேதனையில் இருந்த அம்சவேணி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து அவர், நேற்று முன்தினம் இரவு அரளி விதையை (விஷம்) அரைத்து சாப்பாட்டில் கலந்து 4 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். ஆனால் உணவை சாப்பிட்டதும் கசப்பாக இருப்பதாக அம்சவேணியிடம் குழந்தைகள் கூறினர்.

அதை கேட்டதும் மனம் மாறிய அம்சவேணி கூச்சல் போட்டார். பின்னர் அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது 4 குழந்தைகளையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் அம்சவேணி மற்றும் 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லை காரணமாக அம்சவேணி தனது 4 குழந்தைகளுக்கும் சாப்பாட் டில் அரளிவிதையை அரைத்து கலந்து கொடுத்ததாக முதல் கூறப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு அம்சவேணி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. 4 குழந்தைகளுக்கு தாயே விஷம் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story