திருப்பத்தூர் அருகே, முகம் சிதைத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? - 2 தனிப்படைகள் விசாரணை


திருப்பத்தூர் அருகே, முகம் சிதைத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? - 2 தனிப்படைகள் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-12T22:33:39+05:30)

திருப்பத்தூர் அருகே முகத்தை சிதைத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இறந்தவர் யார்? என்பது குறித்தும், குற்றவாளிகளை பிடிக்கவும் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா உடையாமுத்தூர் அண்ணா நகர் கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பக்கத்து மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டாரா? என பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு கூறியதாவது:-

இந்த கொலை வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலை செய்யப்பட்ட நபருடைய போட்டோவை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளோம். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் வந்து சென்ற வாகனங்களை ஆய்வு செய்து வருகிறோம். பொதுமக்கள் யாருக்காவது அடையாளம் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பத்தூர் போலீஸ் சப்-டிவி‌‌ஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை நடந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ள சம்பவங்கள் விவரம் வருமாறு:-

2013-ம் ஆண்டு கந்திலி சின்னூர் மலைபகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

2016-ம் ஆண்டு கரியம்பட்டி கூட்ரோடு அருகே திருச்சியில் இருந்து காரை கடத்தி வந்து கார் டிரைவரை கழுத்தை அறுத்து கொலை செய்து பிணத்தை வீசி சென்றுள்ளனர்.

2017-ம் ஆண்டு திருப்பத்தூர் அருகே செவ்வாத்தூர் கிராமத்தில் 30 வயது பெண்ணை கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசியுள்ளனர்.

2017-ம் ஆண்டு திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஏரியில் கை கால் தலை உடல் தனித்தனியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர், இதேபோல், 2017-ம் ஆண்டு ஏலகிரிமலை பகுதியில் கழுத்தை அறுத்து பாதி எரிந்த நிலையில் வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த 6 கொலைகளில் கொலை செய்யப்பட்ட நபர்கள் யார்? கொலை செய்தது யார்? என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது 7-வது நபர் உடையமுத்தூர் கிராமத்தில் முகம் சிதைந்த நிலையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Next Story