துணை மின்நிலையத்துக்கு மின்மாற்றி ஏற்றி வந்த ராட்சத லாரி பஞ்சராகி நடுவழியில் நின்றது - போக்குவரத்து பாதிப்பு


துணை மின்நிலையத்துக்கு மின்மாற்றி ஏற்றி வந்த ராட்சத லாரி பஞ்சராகி நடுவழியில் நின்றது - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 9:45 PM GMT (Updated: 12 Dec 2019 6:27 PM GMT)

ஊதியூர் அருகே துணை மின்நிலையத்துக்கு மின்மாற்றி ஏற்றி வந்த ராட்சத லாரி நடுவழியில் டயர் பஞ்சராகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காங்கேயம், 

காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்தில் நூற்றுக்கணக்‌கான ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனத்தின் துணை மின் நிலைய கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. சத்தீஸ்கார்‌ மாநிலத்திலிருந்து இந்த துணை மின் நிலையத்துக்கு 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து திருச்சூர், வேலூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்வதற்கான பணிகள் நடைபெற்று மின்பாதைகள் அமைக்‌கப்பட்டு வருகின்றன.

இந்த துணை மின்நிலையத்துக்கு வடமாநிலங்களிலிருந்து ராட்சத லாரிகள் மூலம் மின்மாற்றி உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு வரப்படுகின்றன. அது போல நேற்று வடமாநிலத்திலிருந்து காங்கேயம் வழியாக 200 சக்கரங்கள் பொருத்தப்பட்ட ராட்சத லாரியில் மின்மாற்றி கொண்டுவரப்பட்டது.

ஊதியூர் அருகே குள்ளம்பாளையம் பகுதியில் வந்தபோது ராட்சத லாரியின் டயர்களில் ஒன்று பஞ்சரானது. இதனால் அந்த இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. நடுவழியில் ராட்சத லாரி நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் ராட்சத லாரியின் டயர் சரி செய்யப்பட்டு அது புறப்பட்டு சென்றது. இந்த லாரியின் முன்னும், பின்னும் பவர் கிரீட் பணியாளர்கள் ஜீப்புகளில் பாதுகாப்புக்காக சென்றனர். தவிர வழியில் மின்சார கம்பிகளில் மின்மாற்றி உரசிவிடாமல் இருக்க லாரி செல்லும் பகுதிகளில் ரோட்டை கடந்து செல்லும் மின்பாதைகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டன. 200 சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரி நிற்பதை அப்பகுதி மக்களும், வாகனங்களில்செல்வோரும் வேடிக்கை பார்த்து சென்றனர்.

Next Story