மடத்துக்குளம் அருகே, 100 நாள் வேலைக்கான சம்பளத்தை வழங்க பொதுமக்கள் கோரிக்கை


மடத்துக்குளம் அருகே, 100 நாள் வேலைக்கான சம்பளத்தை வழங்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 8:18 PM GMT)

மடத்துக்குளம் அருகே 100நாள் வேலைக்கான சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மடத்துக்குளம், 

மடத்துக்குளம் அருகே உள்ள ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஜோத்தம்பட்டி ஊராட்சியின் மூலமாக வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலைக்கு இப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் சென்று வருகின்றனர்.

தற்போது 100 நாள் வேலைக்கான சம்பளம் கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை எனவும், 100 நாள் வேலைகளை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கணியூர் பஸ் நிலையம் பகுதியில் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதற்காக மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணி, மற்றும் மடத்துக்குளம் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆறுமுகம், மடத்துக்குளம் விவசாய சங்க தாலுகா செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த கணியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சமாதானம் அடைந்த 100நாள் வேலை பணியாளர்கள் மேற்கொண்டு போராட்டம் ஏதுவும் நடத்தாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அத்துடன் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு, முறையாக வேலை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும். தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைகளை உடனடியாக வழங்க வேண்டும் இல்லையெனில் வருகிற 18-ந் தேதி அன்று, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story