கட்டுமான பணியின்போது தவறி விழுந்து படுகாயம்: சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு


கட்டுமான பணியின்போது தவறி விழுந்து படுகாயம்: சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 8:38 PM GMT)

கட்டுமான பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாமோதரபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். செல்வம் கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி நரசிம்மநாயக்கன்பாளை யத்தில் வீடு கட்டுமான பணியில் செல்வம் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் கழுத்து எலும்பு முறிந்து படுகாயம் ஏற்பட்டது.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கட்டிட ஒப்பந்ததாரர் முருகேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நேற்று செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செல்வத்தை கட்டிட பணியில் ஈடுபடுத்தியதால் தான் அவர் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளார். இதற்கு காரணமான கட்டிட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று கூறி செல்வத்தின் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் உறவினர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேதபரிசோதனை அரை முன்பு தரையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் செல்வத்தின் உடலை பெற்று சென்றனர். 

Next Story