கட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி: பா.ஜனதா ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் - பங்கஜா முண்டே பரபரப்பு பேச்சு


கட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி: பா.ஜனதா ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் - பங்கஜா முண்டே பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 9:01 PM GMT)

நான் கட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி கிளப்பப்படுவதாகவும், பா.ஜனதாவை ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் என்றும் பங்கஜா முண்டே பரபரப்பாக பேசினார்.

மும்பை,

முன்னாள் மந்திரியான பங்கஜா முண்டே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் கட்சியில் இருந்து விலக போவதாகவும் செய்திகள் பரவின. இதுமட்டும் இன்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் இருந்து பாரதீய ஜனதா என்ற பெயரை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் பங்கஜா முண்டே அளித்த பேட்டியில், “ கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது மத்திய தலைமையால் எடுக்கப்பட்டதல்ல, அந்த முடிவை எடுத்தது மாநில தலைவர்கள் தான். எனவே தேர்தலில் கட்சியின் செயல்திறன் குறைந்ததற்கு தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் பங்கஜா முண்டேயின் தந்தையும், மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவருமான கோபிநாத் முண்டேயின் பிறந்தநாள் விழா நேற்று பீட் மாவட்டம் பார்லியில் நடைபெற்றது.

அப்போது அங்குள்ள கோபிநாத் முண்டேயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கஜா முண்டே பேசியதாவது:-

நான் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி தொடங்க உள்ளேன். மேலும் அவுரங்காபாத்தில் நான் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பேன். இது எந்தவொரு கட்சிக்கும், தனிநபருக்கும் எதிராக இருக்காது. மரத்வாடாவின் பிரச்சினைகளில் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க இது ஒரு அடையாள உண்ணாவிரதமாக இருக்கும்.

நான் கட்சியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வருகிறது. நான் இதை மறுக்கிறேன். கட்சி மாறுவது எனது ரத்தத்திலேயே இல்லை. இந்த செய்தியை ஊடகங்களில் வேகமாக பரவ செய்தது யார் என்பதை பாரதீய ஜனதா தலைமை கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். நான் கட்சியின் முக்கிய பதவியை பெற அழுத்தம் கொடுப்பதாக கூறி என் பெயரை கெடுக்க வேலை நடக்கிறது. நான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ஆதரவை திரட்டவில்லை.

பாரதீய ஜனதா முன்பு ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. பின்னர் மாநிலத்தில் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு காரணம் எனது தந்தை கோபிநாத் முண்டேயின் பங்களிப்பாகும். எனவே இந்த கட்சி எனது தந்தைக்கு சொந்தமானது. ஆனால் மீண்டும் இது சிலரின் கைகளில் செல்லுமானால், நான் ஏன் பேசக்கூடாது?

முதல்-மந்திரி யார் என்பது குறித்த முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். வாக்கெடுப்பு கடைசி நாள் வரை, கட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவர முடிந்தவரை முயற்சித்தேன். கட்சிக்காக இத்தனை வேலைகளை செய்தபின், நான் விலகப்போவதாக செய்தி பரவியது. கட்சி இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, இதன் பின்னணியில் யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Next Story