புதிய அரசில் பதவி ஏற்ற, மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு சிவசேனாவுக்கு உள்துறை; தேசியவாத காங்கிரசுக்கு நிதி


புதிய அரசில் பதவி ஏற்ற, மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு சிவசேனாவுக்கு உள்துறை; தேசியவாத காங்கிரசுக்கு நிதி
x
தினத்தந்தி 12 Dec 2019 11:30 PM GMT (Updated: 12 Dec 2019 9:37 PM GMT)

மராட்டியத்தில் புதிய அரசு பதவி ஏற்ற 2 வாரத்துக்கு பிறகு மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சிவசேனாவுக்கு உள்துறை, தேசியவாத காங்கிரசுக்கு நிதி, காங்கிரசுக்கு வருவாய், பொதுப்பணித்துறை இலாகாக்கள் கிடைத்தன.

மும்பை,

மராட்டியத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கடந்த 28-ந் தேதி புதிய அரசு பதவி ஏற்றது.

அப்போது அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 மந்திரிகளும் பதவி ஏற்றனர். பதவி ஏற்று 2 வாரங்களை கடந்த போதிலும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாததால் அவர்கள் இலாகா இல்லா மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர். முக்கிய இலாகாக்களை கைப்பற்றுவதில் 3 கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியே, இழுபறிக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பதவி ஏற்ற மந்திரிகள் அனைவருக்கும் நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முக்கிய இலாகாவாக கருதப்படும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் உள்துறையை சிவசேனா தன் வசப்படுத்தி கொண்டு உள்ளது. மற்றொரு முக்கிய இலாகாவான நிதித்துறை தேசியவாத காங்கிரசுக்கும், வருவாய், பொதுப்பணித்துறை காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள இலாகாக்கள் விவரம் வருமாறு:-

ஏக்நாத் ஷிண்டே: உள்துறை, நகர வளர்ச்சி, வனம், சுற்றுச்சூழல், குடிநீர் சப்ளை, நீர் பாதுகாப்பு, சுற்றுலா, பொதுநிறுவனங்கள், சட்டமன்ற விவகாரம்.

சுபாஷ் தேசாய்:- தொழில்கள், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தோட்டக்கலை, போக்குவரத்து, மராத்தி மொழி மற்றும் கலாசாரம், துறைமுகம்.

ஜெயந்த் பாட்டீல்:- நிதி, வீட்டுவசதி, பொது சுகாதாரம், கூட்டுறவு, உணவு வினியோகம், தொழிலாளர் மற்றும் சிறுபான்மையினர் நலம்.

சகன் புஜ்பால்:- நீர்ப்பாசனம், கிராம வளர்ச்சி, சமூக நீதி, கலால், திறன் மேம்பாடு, உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.

பாலசாகேப் தோரட்:- வருவாய், மின்சாரம், மருத்துவ கல்வி, பள்ளிக்கல்வி, கால்நடை, பால் வளம், மீன்வளம்.

நிதின் ராவத்:- பொதுப்பணி, பழங்குடியினர் நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், ஜவுளி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, இதர பிற்படுத்தப்பட்டோர், வி.ஜே.என்.டி., சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் நலம்.

மந்திரிகளுக்கு ஒதுக்கப்படாத மற்ற அனைத்து இலாகாக்களையும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவனிப்பார்.

இந்த இலாகா ஒதுக்கீட்டை முதல்-மந்திரி பரிந்துரையின் பேரில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி செய்துள்ளார்.

மந்திரி சபை விரிவாக்கம் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு பிறகு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்கி, 21-ந் தேதி வரை நாக்பூரில் நடக்கிறது.

Next Story