செந்துறை அருகே, வனத்துறை சோதனை சாவடிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


செந்துறை அருகே, வனத்துறை சோதனை சாவடிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 9:45 PM GMT (Updated: 12 Dec 2019 10:15 PM GMT)

செந்துறை அருகே அய்யனார்புரத்தில் இருந்து மலைக்கிராமங்களுக்கு செல்லும் சாலையில் வனத்துறை புதிதாக சோதனை சாவடி அமைத்ததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செந்துறை,

செந்துறை அருகே கரந்த மலைப்பகுதியில் பெரிய மலையூர், சின்னமலையூர், வலசை, பள்ளத்துகாடு ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெரியமலையூரில் பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக மலைப்பாதை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அதன் வழியாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பொருட்கள் சரக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டது.

அந்த பாதை வழியாக தற்போது கிராம மக்கள் இருசக்கர வாகனங்களிலும், மினிவேன்களிலும் சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யனார்புரம் மலையடிவாரத்தில் கரந்தமலைக்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் புதிதாக சோதனை சாவடி அமைத்தனர். இதனால் மலைக்கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கிராம மக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து செந்துறை-நத்தம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனத்துறை சோதனை சாவடி அமைத்ததால் தங்களுக்கு சாலை வசதி இல்லை. மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவசர சிகிச்சை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், தங்களுக்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அவர்களிடம் தங்கள் கோரிக்கைகளை திண்டுக்கல் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கூறி தீர்வு காணும்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story