திருவொற்றியூர், மணலியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.4½ லட்சம் அபராதம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை,
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்பட்டது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, சிறப்பு குழுக்களால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் திருவொற்றியூர் மண்டலத்தில் 3 தனிக்குழு அமைத்து, வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், சாலையோர கடைகள் என 13 ஆயிரத்து 563 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது வரை ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டு, 6.4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மணலி மண்டலத்தில் 6.1 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story