சிவகங்கை பாசனத்துக்கு வைகையில் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


சிவகங்கை பாசனத்துக்கு வைகையில் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி வழக்கு  - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 12 Dec 2019 11:51 PM GMT)

வைகை ஆற்றில் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதிமூலம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் விரகனூர் மதகு அணை மணலூரில் இருந்து மானாமதுரை வரையிலான வைகை ஆற்றுப்பகுதியானது, வைகை நதி பாசன ஆயக்கட்டு 2-ம் பகுதியில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருப்புவனம் தாலுகா, மானாமதுரை தாலுகாவில் உள்ள 87 கண்மாய்கள் வைகை நதியின் பழைய ஆயக்கட்டுக்குள் அடங்கும்.

இந்த 87 கண்மாய்களுக்கு வரும் வைகை நீர் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மாதம் வைகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் திருப்புவனம், மானாமதுரை தாலுகாவில் 87 கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தது. அதன்பின் இப்பகுதி நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் அறுவடை வரை விவசாயத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இந்தநிலையில் வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர்.

வழக்கமாக, வெள்ள அபாயம் ஏற்படும் நேரத்திலும், உபரி நீர் இருக்கும்போது மட்டுமே கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது வைகை நீர் பங்கீட்டு விதி. ஆனால் இந்த விதியை மீறி, தற்போது கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

எனவே கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்தி, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு போதிய தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கிருதுமால் நதியில் குடிநீர் பயன்பாட்டுக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் இதுகுறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story