சேலத்தில் பரபரப்பு: ரெயில் தண்டவாளத்தில் விரிசல்; சபரி எக்ஸ்பிரஸ் தப்பியது
சேலத்தில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர் சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் சபரி எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது.
சூரமங்கலம்,
ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 17230) நேற்று காலை 6.30 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து பயணிகள் இறங்கிய பிறகு 6.35 மணிக்கு அந்த ரெயில் அங்கிருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றது.
சேலம் நெய்காரப்பட்டி அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் அதிக அளவு அதிர்வு ஏற்பட்டது. இதனால் ரெயில் பயணிகளுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த ரெயில்வே ஊழியர்(கீமேன்) தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்துவதற்காக சிவப்பு கொடியை காண்பித்தார்.
இதையடுத்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ஏதோ அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதோ? என்ற பதற்றத்துடன் ரெயிலில் இருந்து கீழே இறங்கி வந்தனர். பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து உடனே ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே கோட்ட பொறியாளர் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
முதலில் தற்காலிகமாக கிளிப் மூலம் தண்டவாளத்தை இணைத்தனர். அதைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேர கால தாமதத்திற்கு பிறகு சபரி எக்ஸ்பிரஸ் விரிசல் ஏற்பட்ட பகுதியை மெதுவாக கடந்து சென்றது. தண்டவாள விரிசலை ஆய்வின் போது சரியான நேரத்தில் ரெயில்வே ஊழியர் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு சபரி எக்ஸ்பிரஸ் தப்பியது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘பனி காலத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்படும். இதனை ரெயில்வே ஊழியர்(கீமேன்) ஆய்வின் போது கண்டுபிடிப்பார்கள். அதே நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வை வைத்து ரெயில் டிரைவரும் கண்டுபிடிக்கலாம். அதுபோல் நெய்காரப்பட்டி தண்டவாளத்தில் விரிசல் கண்டறிந்து ரெயிலை நிறுத்தி உள்ளனர். தண்டவாள விரிசலை சரிெசய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் ’ என்றனர்.
Related Tags :
Next Story