திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளுக்கு - வைகை தண்ணீரைதிறக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தல்


திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளுக்கு - வைகை தண்ணீரைதிறக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2019 9:30 PM GMT (Updated: 13 Dec 2019 8:24 PM GMT)

வைகை அணையில் இருந்து திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மானா மதுரை எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன் முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சருக்கு மானாமதுரை எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மானாமதுரை,

வைகை அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வழியாக திறந்து விடப்படும் ஏழு பங்கு தண்ணீர் சிவகங்கை மாவட்ட பகுதிகளான இளையான்குடி, சாலைகிராமம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்கிறது. சிவகங்கை மாவட்டமாக இருந்தாலும் கடைமடை பகுதியாக இருப்பதால் இப்பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போதுதான் இளையான்குடி, சாலைகிராமத்திற்கு தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பாலான நேரங்களில் இந்த கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால் கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். கண்மாயில் தண்ணீர் தேங்காததால் பாசன கிணறுகளும் வறண்டு வருகின்றன. எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது பார்த்திபனூர் மதகு அணையின் இடது பிரதான கால்வாயையும் திறந்து இளையான்குடி, சாலைகிராமம் உள்பட 20 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் வட கிழக்கு பருவமழை காரணமாக விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பார்த்திபனூர் மதகு அணையின் இடது பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் இளையான்குடி, சாலை கிராம பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அப்பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story