நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்


நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 8:24 PM GMT)

நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதாவை கிழித்து தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நாடாளுமன்றத்தில் தற்போது புதிய குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

நெல்லை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று குடியுரிமை சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் துரை தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகலை கிழித்தனர். இதில் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஷெரீப், துணை செயலாளர்கள் ஆயான் நடராஜன், பேபி ரசப்பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தி.மு.க.வினர் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போராட்டம் நடத்தினர். இதில் நகர செயலாளர்கள் ‌ஷாபீர், சேகனா, ஒன்றிய செயலாளர்கள் முத்தையா பாண்டியன், ஜெயபாலன், துரை என்ற ராமையா, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story