கும்பகோணம் அருகே குளத்தில் சுற்றித்திரிந்த முதலை பிடிபட்டது


கும்பகோணம் அருகே குளத்தில் சுற்றித்திரிந்த முதலை பிடிபட்டது
x
தினத்தந்தி 13 Dec 2019 10:04 PM GMT (Updated: 13 Dec 2019 10:04 PM GMT)

கும்பகோணம் அருகே குளத்தில் சுற்றித்திரிந்த முதலை பிடிபட்டது.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுறம்பியம் பகுதியில் சாவடி குளம் உள்ளது. இந்த குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக முதலை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனால் குளத்தில் இறங்கி குளிப்பதற்கு மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் குளத்தில் முதலை அங்கும், இங்கும் சுற்றித்திரிந்ததை பார்த்து பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து கும்பகோணம் தாசில்தார் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மற்றும் சுவாமிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று குளத்தில் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணி அளவில் குளத்தில் சுற்றித்திரிந்த முதலை வனத்துறையினரிடம் பிடிபட்டது.

குளத்துக்கு அருகே அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குளத்தில் முதலை சுற்றித்திரிந்தது பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கியது. நேற்று முதலை பிடிபட்ட பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட முதலையை வனத்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.


Next Story