புதுச்சேரி கடல் வழியாக இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சியா? போலீசார் திடீர் சோதனை- பரபரப்பு


புதுச்சேரி கடல் வழியாக இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சியா? போலீசார் திடீர் சோதனை- பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 5:47 AM IST (Updated: 14 Dec 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி வழியாக இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சிப்பதாக தகவல் பரவியதால் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பாகூர்,

கடந்த காலங்களில் இலங்கை தமிழர்கள் கள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் வருவோரை தற்போது அங்கு ஏற்க மறுக்கப்படுகிறது. இதனால் இலங்கை தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் பரவியது.

இதுபற்றி தமிழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புதுச்சேரி அல்லது காரைக்கால் பகுதியில் இருந்து இலங்கை தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி புதுச்சேரி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கடலோர மற்றும் உள்ளூர் போலீசார் இதை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணிக்க வேண்டும். ஓட்டல்கள், உணவு விடுதிகளில் சோதனை நடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் பனித்திட்டு, நரம்பை, புதுக்குப்பம் பகுதிகளில் நேற்று திடீரென ஆய்வு நடத்தினார்கள். அப்போது இலங்கை தமிழர்களின் நடமாட்டம் இருந்தால் அதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

இதேபோல் தவளக்குப்பம், நல்லவாடு, வீராம்பட்டினம் கடற்கரையிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை கடலோர பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story