குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2019 12:26 AM GMT (Updated: 14 Dec 2019 12:26 AM GMT)

குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்ட திருத்தம் இஸ்லாமியர்களையும், ஈழத்தமிழர்களையும் ஒழித்துக்கட்ட கொண்டு வரப்பட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதைக்கண்டித்து குடியுரிமை திருத்த சட்ட நகலை கொளுத்தும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

இதற்காக அவர்கள் ராஜா தி்யேட்டர் சந்திப்பில் கூடினார்கள். அங்கு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பாக கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது சிலர் மறைத்து வைத்திருந்த உள்துறை மந்திரி அமித்ஷாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதை பறித்து சென்றனர்.

இதற்கிடையே சிலர் குடியுரிமை திருத்த சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினார்கள். அதை போலீசார் அணைத்து நகலை பறித்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன். துணைத்தலைவர் இளங்கோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர் உள்பட சுமார் 50 பேரை கைது செய்தனர்.

கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகே சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா கட்சியினர் (சூசி கம்யூனிஸ்டு) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டதுக்கு செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story