திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்து திடீரென வெளியேறிய போலீசாரால் பரபரப்பு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்து திடீரென வெளியேறிய போலீசாரால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 7:31 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திடீரென வெளியேறினர். பின்னர் 5 மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் ஆகியவற்றின் வழியாக பக்தர்கள் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கோவிலில் கிளி கோபுரத்தின் முன்பு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யும் அறை உள்ளது. அதில் போலீசார் சோதனை செய்வார்கள். மேலும் கோவிலின் உள் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று கோவிலின் உள் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காலை 9 மணி அளவில் திடீரென வெளியேறினர். மேலும் கிளி கோபுரம் முன்பு பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்யும் அறையும் மூடப்பட்டு இருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

வரிசையில் வந்த பக்தர்கள் எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லாததால் கிளி கோபுரம் நுழைவு வாயிலில் முண்டியடித்து சென்றனர். மூலவர் சன்னதி முன்பு நெருக்கடியான நிலை உருவானது. இதனால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கோவில் பணியாளர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பிற்பகல் 2 மணி அளவில் கோவில் பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேறிய போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணிக்கு திரும்பினர்.

போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேறிய சம்பவம் குறித்து கோவில் அலுவலர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் விசாரித்த போது, நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது மூலவர் சன்னதி முன்பு அமர்வு தரிசனம் செய்யும் பகுதிக்குள் செல்லும் வழியில் உள்ள கதவு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் ஊழியரிடம் கதவை திறந்து விடுமாறு போலீஸ் சூப்பிரண்டுடன் வந்த போலீசார் கேட்டு உள்ளனர்.

அதற்கு அவர் தன்னிடம் சாவி இல்லை என்றும், கோவில் நிர்வாக அலுவலகத்தில் அனுமதி பெற்று வந்தால் சாவியை எடுத்து வந்து திறந்துவிடுவதாக கூறியுள்ளார். சிறிது நேரம் காத்திருந்த போலீஸ் சூப்பிரண்டு அமர்வு தரிசனம் பகுதிக்கு செல்லாமல் பக்தர்கள் செல்லும் கட்டண தரிசன பாதையில் நின்ற படி, சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றனர்.

அதேபோல் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த உள்ளூர் பிரமுகர் ஒருவரையும் கோவில் ஊழியர்கள் அமர்வு தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் பிரமுகர் நேற்று அவரது தரப்பை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோருடன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் கோவில் அலுவலர்கள் பேசி இணை ஆணையர் வெளியூர் சென்று உள்ளார். நாளை (திங்கட் கிழமை) வருவார் அவர் வந்ததும் பேசி கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story