செங்கல்பட்டு அருகே சாலையில் பள்ளம் தோண்டியதற்கு பொதுமக்கள் எதிர்பபு


செங்கல்பட்டு அருகே சாலையில் பள்ளம் தோண்டியதற்கு பொதுமக்கள் எதிர்பபு
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 9:06 PM GMT)

செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் அமைந்துள்ள படவேட்டம்மன் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள சாலையை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு,

வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த சாலை வழியாக சென்று வந்தனர். இந்த நிலையில் படவேட்டம்மன் கோவில் பொறுப்பாளர் திடீரென கோவில் மண்டபம் கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் அந்த சாலையில் பெரிய பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சாலையை பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையை மறித்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடமும், கோவில் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த சாலையை பொதுமக்கள் வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story