காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை


காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2019 5:21 AM IST (Updated: 15 Dec 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சின்னையனன்சத்திரம் அடுத்த சூரமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பொற்செல்வி (20). இவர் காஞ்சீபுரம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் மணிகண்டனும், பொற்செல்வியும் காதலித்து வந்தனர். காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காஞ்சீபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர். பொற்செல்வி திருமணத்திற்கு பின்னர் கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பொற்செல்வி தன்னுடைய பெற்றோருக்கு போன் செய்து கணவர் தன்னுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார் என்று கூறி அழுதுள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பொற்செல்வி வழக்கம் போல கல்லூரிக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது பொற்செல்விக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மணிகண்டன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டன் வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது பொற்செல்வி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொற்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

பொற்செல்வியின் தந்தை மணி சுங்குவார்சத்திரம் போலீசில் அளித்துள்ள புகாரில், ‘தன்னுடைய மகள் வரதட்சணை கொடுமையால்தான் இறந்துள்ளார். ஆகவே மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.

Next Story