திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் பிரிந்து வாழ்ந்த 17 தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர் 1,960 வழக்குகளுக்கு தீர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் பிரிந்து வாழ்ந்த 17 தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர் 1,960 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 15 Dec 2019 5:27 AM IST (Updated: 15 Dec 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் பிரிந்து வாழ்ந்த 17 தம்பதிகள் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சேர்த்து வைக்கப்பட்டனர். 1,960 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான செல்வநாதன் தலைமை தாங்கினார்.

மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவரும், மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதியுமான பார்த்திபன், தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஸ்ரீஜா, சார்பு நீதிமன்ற நீதிபதி உமா, மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு கோர்ட்டு நீதிபதி அருந்ததி, நீதிபதிகள் சுபாஷினி, ராதிகா, இளவரசி, சரஸ்வதி மற்றும் பயிற்சி நீதிபதிகள், வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

17 தம்பதிகள்

அதேபோல அம்பத்தூர், பூந்தமல்லி, திருவெற்றியூர், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த லோக் அதாலத்தில் முத்தாய்ப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த 17 தம்பதிகள் பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சேர்த்து வைக்கப்படட்னர்.

இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 6,151 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றில் 1,960 வழக்குகள் முடிக்கப்பட்டு அவற்றுக்கு ரூபாய் 37 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்து 288-க்கு தீர்வு காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு மாவட்ட தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன் காசோலைகளை வழங்கினார்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டு - 2 வளாகத்தில், நடைபெற்ற சிறப்பு விழாவில், காஞ்சீபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் கார்த்திகேயன் தொடக்க உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி சந்திரன் தலைமையில் லோக் அதாலத் நடந்தது.

இதில் நீதிபதி சந்திரன் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 544 வழக்குகள் முடிவு காணப்பட்டு, அதன் மூலம் ரூ.15 கோடி இழப்பீடு தொகை வழங்க சமரசம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற சமரச தீர்வு முகாம்களில் பங்குபெற்று தங்களது வழக்குகளை எந்தவித சிரமமும் இன்றி விரைவாக தீர்வு காண முயலவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

Next Story