மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 10:30 PM GMT (Updated: 15 Dec 2019 8:12 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நிரம்பிய அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.60 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,447 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

மேலும் தென்காசி மாவட்டம் கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த தண்ணீரும் தாமிரபரணியில் கலந்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறுக்குத்துறையில் உள்ள முருகன் கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது.

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 155.51 அடியாக இருந்தது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 109.30 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 40.75 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 132 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 40 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 30 கனஅடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. நம்பியாறு அணை நீர்மட்டம் 18.72 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக இந்த அணைகளின் நீர்இருப்பு முழு கொள்ளளவாக நீடித்து வருகிறது.

கடனாநதி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வினாடிக்கு 712 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையும் நிரம்பி விட்டது. இந்த அணைக்கு 135 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கருப்பாநதி அணை, குண்டாறு அணை மற்றும் அடவிநயினார் அணைகளுக்கு வருகிற தண்ணீர் பாசனத்துக்கும், மறுகால்வாயில் உபரி நீராகவும் திறக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அம்பை -19, சேரன்மாதேவி -13, நாங்குநேரி -13, பாளையங்கோட்டை -1, ராதாபுரம் -5, நெல்லை -7, பாபநாசம் -20, சேர்வலாறு -22, மணிமுத்தாறு -19, நம்பியாறு -24, கொடுமுடியாறு -25, ஆய்குடி -24, சங்கரன்கோவில் -26, செங்கோட்டை -15, சிவகிரி -13, தென்காசி -23, கடனாநதி -20, ராமநதி -28, கருப்பாநதி -24, குண்டாறு -9, அடவிநயினார் -15.

Next Story