திண்டிவனம் அருகே, லாரி மீது கார் மோதியதில் பெண் சாவு; 2 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில், பெண் பலியானார், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டிவனம்,
சென்னை பாடியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது மனைவி அருள்சகாய லதா(வயது 45) மற்றும் இவரது உறவினர்களான கொரட்டூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆரோக்கியராஜ் (30), அவரது மனைவி ஜான்சி(26), குழந்தை கஜோலின்(4) ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை ஆரோக்கியராஜ் ஓட்டினார். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அருள்சகாய லதா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். ஆரோக்கியராஜூம், ஜான்சியும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து பற்றி தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரில் சிக்கி இருந்த அருள் சகாய லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story