ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி 100 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம் வியாபாரிகள் வாக்குவாதம்


ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி 100 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம் வியாபாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 18 Dec 2019 4:44 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னேற்பாடு பணியாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலை சுற்றியுள்ள 100 கடை களின் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளாக வந்து சுவாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.

ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவாக ஜனவரி 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி வருகிற 25-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தொடங்குகிறது. இந்த நிலையில் ரெங்கநாதர் சுவாமி கோவிலை சுற்றி உள்ள கடைகள் முன்பு சன்சைடு வைத்தும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை இறக்கியும், திட்டுகள் அமைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எனவே, பக்தர்கள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணி தொடங்கியது.

ஏற்கனவே, கடைக்காரர் களுக்கு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள அறிவுறுத்தி அறிவிப்பு செய்யப்பட்டது. அவற்றில் சில கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர். இருப்பினும் கோவிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. திருச்சி அம்மாமண்டபம் முன்பிருந்து ஸ்ரீரங்கம் கோபுரவாசல் வரை சாலையின் இருபுறமும் உள்ள சின்ன, சின்ன ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து தெற்கு வாசல், தெற்கு உத்திரவீதி, சாத்தார வீதி(பூக்கடை வீதி), ரெங்கா கோபுரம், வடக்கு வாசல், கீழ அடையவளைஞ்சான் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்புள்ள சன்சைடு, ஓலையால் வேயப்பட்ட கூரை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை, சிமெண்டு திட்டு உள்ளிட்டவை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு அவை மாநகராட்சி பணியாளர்களால் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.

சில இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தெற்கு உத்திரவீதியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் ஒரு கடை வியாபாரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வைகுண்ட ஏகாதசிக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. எங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்தால் நாங்களே அகற்றி கொள்கிறோம் என்றார். ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினர். ஏற்கனவே போதும், போதும் என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுத்து விட்டோம். இனி அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இதுபோல கீழ அடையவளைஞ்சான் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது சின்னதாக ஜவுளிக்கடை வைத்திருந்த வியாபாரி ஒருவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பூக்கடை வீதியில் நடைபாதையில் பூக்களை வைத்து விற்பனை செய்தவர்களை அப்புறபடுத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். உடனடியாக பூக்கள் இருந்த பாத்திரத்தை கடைக்குள் எடுத்து சென்றனர். வைகுண்ட ஏகாதசி முடிந்தும் 20 நாட் களுக்கு மேலாக சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே, பக்தர்கள் தொடர்ந்து ஒரு மாதகாலம் அதிக அளவில் வருவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பின்போது ஸ்ரீரங்கம் காந்திசிலை அருகே வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கொடிக்கம்பத்தை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கொடிகம்பத்தை கொடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி மாநகராட்சி லாரி முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் கொடிக் கம்பத்தை அவரிடம் கொடுத்ததால் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.

Next Story