திருமங்கலம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவன் சாவு - கிராம மக்கள் மறியல்


திருமங்கலம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவன் சாவு - கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:30 AM IST (Updated: 21 Dec 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

மர்ம காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவன் பலியானான். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலம், 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மாசவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், காளிமுத்து. அவருடைய மனைவி துர்காதேவி. இவர்களுடைய மகன் கதிர்வேலன் (வயது 8). கள்ளிக்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கதிர்வேலனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனுக்கு காரியாபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கதிர்வேலன் பரிதாபமாக இறந்தான்.

இதே போல் சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஆத்தாங்கரை (45) என்பவரும் மர்ம காய்ச்சலுக்கு பலியானார்.

எனவே தங்கள் ஊரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறி சுகாதாரத்துறையை கண்டித்து மாசவநத்தம் கிராமத்தினர் நேற்று காலை கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளிக்குடி போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் கைவிட்டனர்.

Next Story