சுரண்டையில், பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - திருமணத்துக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சோக முடிவு


சுரண்டையில், பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - திருமணத்துக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சோக முடிவு
x
தினத்தந்தி 21 Dec 2019 5:15 AM IST (Updated: 21 Dec 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் திருமணத்துக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் மனமுடைந்த பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் பாளையடி தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் மாரிச்செல்வி(வயது25). எம்.எஸ்.சி. பட்டதாரி. இவர், சுரண்டையில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமண ஏற்பாடு செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அந்த மாப்பிள்ளை, மாரிச்செல்விக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் காலையில் சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவரை பெற்றோர் தேடினர். ஆனால் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுரண்டை போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சுரண்டை பெருமாள் கோவில் செல்லும் வழியிலுள்ள ஒரு கிணற்றில் இளம்பெண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாரிச்செல்வியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது, அது மாரிச்செல்வியின் உடல் தான் என அடையாளம் காட்டினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்,‘திருமணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் அவர் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாப்பிள்ளை பிடிக்காததால் மனமுடைந்த பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story