தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: புதிய சாலை அமைக்கும் பணி


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: புதிய சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 21 Dec 2019 10:45 PM GMT (Updated: 21 Dec 2019 5:18 PM GMT)

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜை அடுத்தமாதம்(ஜனவரி) 27-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ந் தேதி மதியம் 12 மணி வரை நடக்கிறது. முதல் கால யாகசாலை பூஜை 1-ந் தேதி மாலை தொடங்குகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி பெரியகோவில் கோபுரங்கள், மதில்சுவர்கள், சன்னதிகள், தெய்வங்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சிதைந்த சிற்பங்களையும் சீரமைக்கும் பணி நடக்கிறது. கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. சிவகங்கை பூங்கா நுழைவு வாயில் முதல் பெத்தண்ணன் கலையரங்கம் வரை பேவர் பிளாக் கற்களை கொண்டு புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

தொல்லியல்துறை அதிகாரிகள் பெரியகோவிலில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர். மின்வாரிய அதிகாரிகள், பெத்தண்ணன் கலையரங்கில் மின்வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றவும் அவர்கள் முடிவு செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எந்த நெருக்கடியும் இன்றி பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இரும்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பெத்தண்ணன் கலையரங்கம் சீரமைக்கும் பணி, சிவகங்கை பூங்கா நுழைவு பகுதி புதிய சாலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, பெரியகோவில் சாலையை சீரமைக்கும் பணி ரூ.5 கோடியே 24 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது என்றனர்.


Next Story