தர்மபுரியில் பள்ளி மாணவிகளுக்கான தேசிய கைப்பந்து போட்டி 29 மாநில அணிகள் பங்கேற்பு


தர்மபுரியில் பள்ளி மாணவிகளுக்கான தேசிய கைப்பந்து போட்டி 29 மாநில அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிகளுக்கான தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் தர்மபுரியில் நேற்று தொடங்கியது. இதில் 29 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

தர்மபுரி,

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 65-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், புதுச்சேரி, தெலுங்கானா, ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 29 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

தேசிய கைப்பந்து போட்டியின் தொடக்க விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி வரவேற்றார். ராஜஸ்தானை சேர்ந்த எஸ்.ஜி.எப்.ஐ. துணைத்தலைவர் ராதாகிரி‌‌ஷன்பரிகர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி, சண்முகவேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பியுலாஜேன்சுசிலா, தமிழ்நாடு கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்டின்சுதாகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

அணிகள் மோதல்

விழாவின் தொடக்கத்தில் 29 மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் அணிகள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து கைப்பந்து போட்டிகள் தொடங்கியது. முதல்கட்டமாக ஜார்கண்ட்-தெலுங்கானா, புதுச்சேரி-ஒடிசா ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டிகளில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்தினார்கள். மின்னொளியில் நடக்கும் இந்த போட்டிகளை பொதுமக்கள் திரளாக வந்து கண்டு களித்தனர். இந்த போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு பதக்கம், சுழற்கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Next Story