உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு


உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 8:00 PM GMT)

சூளகிரி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பஸ்தலபள்ளி ஊராட்சியை சேர்ந்த முடுப்பிநாயக்கன்பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் ஆகிய கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 250 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமங்கள் வனப்பகுதி அருகே அமைந்துள்ளன.

மேலும் கிராமத்திற்கு சென்று வர சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிரசவ காலங்களில் இந்த கிராமத்து கர்ப்பிணிகள் 13 கி.மீ. தொலைவில் உள்ள சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாத நிலை உள்ளது.

அதே போல இப்பகுதிகளில் தண்ணீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

தேர்தல் புறக்கணிப்பு

இந்தநிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முடுப்பிநாயக்கன்பாளையம் மற்றும் வேடியப்பன் கொட்டாய் ஆகிய 2 கிராம மக்களும் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டினார்கள். மேலும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனிடையே, அப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், கிராம மக்களின் வீடுகளில் வரைந்திருந்த சின்னங்களை, சுண்ணாம்பு கரைசல் ஊற்றி மக்கள் அழித்து விட்டனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும் வரை உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து தேர்தல்களை புறக்கணிக்கவும் இந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த இரு கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால், வேட்பாளர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Next Story