குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக் கொன்ற பெண் கைது


குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக் கொன்ற பெண் கைது
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 5:59 PM GMT)

குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கே.மடத்துபட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47). இவருடைய மனைவி தனலட்சுமி (40). இவர்களது மகன் அரவிந்த்.

முத்துராஜ் அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முத்துராஜ் திடீரென இறந்து விட்டதாக அவரது தாய்மாமா அழகர் ராமானுஜத்துக்கு தனலெட்சுமி போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று காலை மாலையுடன் முத்துராஜின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் முத்துராஜ் கொலை செய்யப்பட்டு ரத்த காயங்களுடன் கிடந்தார். இது குறித்து அழகர்ராமானுஜம் வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. மேலும் போலீசார் தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர். பின்னர் ஊரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தனலெட்சுமியையும், அவருடைய தம்பி சஞ்சீவியையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் தனலட்சுமியின் தந்தை கோபால்சாமி, தாய் விஜயலட்சுமி, மகன் அரவிந்த் ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

விசாரணையில், குடிபோதையில் தகராறு செய்த முத்துராஜை, தனலெட்சுமியும், அவரது தம்பி சஞ்சீவியும் சேர்ந்து அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. தனலெட்சுமியின் உறவினர் ஒருவர் சாமிக்கு மாலை அணிந்திருந்ததால் வீட்டில் விரதம் கடைபிடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜ் குடிபோதையில் வந்து தனது மகனை அசைவம் சாப்பிடச் சொல்லி தாக்கினாராம். இதனை தனலெட்சுமியும், அவரது தம்பி சஞ்சீவியும் தட்டிக் கேட்டுள்ளார்.

பின்னர் நடந்த தகராறில் தனலெட்சுமியும், சஞ்சீவியும் சேர்ந்து முத்துராஜை கம்பால் அடித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, சஞ்சீவியை கைது செய்தனர்.

Next Story