வாக்காளர்களுக்கு வழங்க கோவிலில் பதுக்கி வைத்திருந்த, 10 கிலோ எடை கொண்ட 92 அரிசி பைகள் பறிமுதல்
காங்கேயம் அருகே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கோவிலில் பதுக்கி வைத்திருந்த தலா 10 கிலோ கொண்ட 92 அரிசி பைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
காங்கேயம்,
காங்கேயம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கேயம் அருகே உள்ள வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டாக்காரன்புதூரில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரிசி பைகள் அடுக்கி வைத்திருப்பதாக காங்கேயம் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று அந்த கோவில் வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது தலா 10 கிலோ கொண்ட 92 அரிசி பைகள்(சிப்பங்கள்) அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதை வைத்தது யார் என்று தெரியவில்லை. யாரும் இதற்கு சொந்தம் கொண்டாடவில்லை.
இதை தொடர்ந்து அந்த அரிசி பைகளை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கோவில் வளாகத்தில் பதுக்கி வைத்த அரிசி பைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story