திருவள்ளூர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஓட்டுப்பதிவு - கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஓட்டுப்பதிவு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 7:15 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 30-ந்தேதி என 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 24 மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கும், 230 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், 526 ஊராட்சி மன்ற தலைவர் பதவி இடங்களுக்கும், 3 ஆயிரத்து 945 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 725 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மேலும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் முதல்கட்டமாக கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் என 8 ஒன்றியங்களில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் பணியாளர்களின் அடையாள அட்டை, அஞ்சல் நிலைய அல்லது பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், பான்கார்டு, ஸ்மார்ட் கார்டு, தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய மருத்துவ காப்பீட்டு புகைப்படத்துடன் கூடிய மின்னணு அட்டை, முன்னாள் படைவீரர் அல்லது முன்னாள் படைவீரர் விதவை அல்லது சார்ந்தவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், ஓய்வூதிய புத்தகம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story