கீழே கிடந்த செல்போனை எடுத்த புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை - 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு


கீழே கிடந்த செல்போனை எடுத்த புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை - 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 29 Dec 2019 5:33 PM GMT)

கீழே கிடந்த செல்போனை எடுத்த புரோட்டா மாஸ்டரை அடித்துக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துடியலூர், 

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் அசோக்நகர் மேல்பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 39). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் வால்பூரான் (35), சதீஷ் கண்ணன் (35) ஆகியோருடன் கவுண்டம்பாளையத்தில் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று காலை 7 மணி அளவில் மதுவை வாங்கி குடித்ததாக தெரிகிறது.

பிறகு அவர்கள் 3 பேரும் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது செந்திலின் சட்டைப்பையில் இருந்து செல்போன் கீழே விழுந்தது. அதை அவர்கள் 3 பேரும் கவனிக்க வில்லை.

சிறிது தூரம் சென்ற பிறகு செந்தில் தனது சட்டைப்பையில் இருந்த செல்போன் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், வந்த வழியாக திரும்பி சென்று செல்போனை தேடினார். மேலும் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் செல்போன் கிடந்ததா என்று கேட்டுள்ளார்.

ஆனால் யாரும் எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து அவர், வால்பூரானின் செல்போனில் இருந்து தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அங்கிருந்த ஒருவரிடம், செந்திலின் செல்போன் ஒலித்தது.

உடனே அவர்கள், அந்த நபரிடம் செந்திலின் செல்போன் எப்படி உங்களிடம் வந்தது என்று விசாரித்தனர். அதற்கு அவர் கீழே கிடந்து எடுத்து வைத்திருப்பதாக கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில், வால்பூரான், சதீஷ்கண்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த நபரை கை மற்றும் அங்கு கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவருடைய மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்ததால் மயங்கி விழுந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்த அந்த நபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அடித்துக் கொலை செய்யப்பட்டவர் கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முத்துசாமி (48) என்பதும், அவர், அங்குள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில், வால்பூரான் ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான சதீஷ்கண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட முத்துசாமிக்கு சுகந்தி (40) என்ற மனைவியும், தினேஷ் (22), கணேஷ் (13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story