கொடைக்கானல் அருகே, மலைக்கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன


கொடைக்கானல் அருகே, மலைக்கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-30T01:23:00+05:30)

கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

கொடைக்கானல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழனி உள்பட 7 ஒன்றியங்களில் 2-ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் கொடைக்கானல் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவி, 12 ஒன்றிய கவுன்சிலர்கள், 15 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 327 ஊராட்சி உறுப்பினர்கள் என ெமாத்தம் 355 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கிடையே இந்த தேர்தலுக்காக மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத வெள்ளகவி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

இதற்காக கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஓட்டுப்பெட்டிகள் வட்டக்கானல் வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து குதிரைகள் மூலம் வெள்ளகவி கிராமத்திற்கு ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும் தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் மலைப்பாதையில் நடந்து சென்றனர். வெள்ளகவி கிராமத்தில் 415 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் வெள்ளகவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் கிராமத்தில் 133 வாக்காளர்களும், பெரியூர் கிராமத்தில் 147 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஓட்டுப்பெட்டிகள் பெரியகுளம் நகரில் இருந்து சோத்துப்பாறை அணை வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து குதிரைகள் மூலம் சின்னூர், பெரியூர் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

மேலும் மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த மஞ்சம்பட்டி என்ற மலைக்கிராமத்தில் 413 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஓட்டுப்பெட்டிகள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பழனி மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக சென்று சின்னாறு என்ற பகுதி வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து தனி வாகனம் மூலம் மஞ்சம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மலைக்கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டபோது, உடன் தேர்தல் அலுவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தேர்தல் பணியாற்றுவதற்காக சுமார் 5 கி.மீ. தூரம் வரை மலைப்பாதையில் நடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story