மும்பை விதான் பவனில் நடக்கிறது மராட்டிய மந்திரி சபை இன்று விரிவாக்கம் அஜித் பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி?


மும்பை விதான் பவனில் நடக்கிறது மராட்டிய மந்திரி சபை இன்று விரிவாக்கம் அஜித் பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி?
x
தினத்தந்தி 29 Dec 2019 11:30 PM GMT (Updated: 2019-12-30T03:20:59+05:30)

மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் இன்று மும்பை விதான் பவனில் நடக்கிறது.

மும்பை, 

மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் இன்று மும்பை விதான் பவனில் நடக்கிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

புதிய கூட்டணி அரசு

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

ஆனால் மந்திரி சபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கேள்விகளை எழுப் பியது.

இறுதி முடிவு

இந்தநிலையில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து 30-ந்தேதி (இன்று) மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியானது. இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர ஆலோசனைகள் நடத்தின.

அப்போது எந்த கட்சிகளுக்கு எந்த இலாக்களை ஒதுக்குவது என்பதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

36 பேருக்கு பதவி

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) விதான் பவன் வளாகத்தில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதில் 36 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

மந்திரி சபையில் ஏற்கனவே பதவி ஏற்ற 6 பேரையும் சேர்த்து சிவசேனா சார்பில் 15 பேரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 14 பேரும், காங்கிரஸ் கட்சியின் 12 பேரும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அஜித் பவார் துணை முதல்-மந்திரி?

இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்பவார் கடந்த மாதம் 23-ந் தேதி பா.ஜனதாவுடன் கைகோர்த்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று பின்னர் அதை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பிரதிவிராஜ் சவானுக்கு மந்திரி சபையில் இடம் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் தற்போது மந்திரியாக உள்ளார். எனவே அவர் வகித்து வரும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பிரதிவிராஜ் சவானுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story