எனது மகளை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் சங்கீதாவின் தாயார் பேட்டி


எனது மகளை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் சங்கீதாவின் தாயார் பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-30T03:56:39+05:30)

எனது மகளை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று, நித்யானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்த சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கூறினார்.

திருச்சி,

திருச்சி நவலூர்குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகள் சங்கீதா, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். இந்தநிலையில் கடந்த 2006-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு தியான வகுப்புக்கு ஜான்சிராணி சென்றபோது, சங்கீதாவையும் அழைத்து சென்றார்.

அதன்பிறகு சங்கீதா, நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருந்து தியான வகுப்பில் பயின்று வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த சீடர் ஒருவர், ஜான்சிராணியை தொடர்பு கொண்டு, உங்கள் மகள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறினார். பின்னர் சங்கீதாவின் உடலை திருச்சிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

உள்துறை அமைச்சகம் கடிதம்

இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜான்சிராணி பெங்களூரு ராம்நகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ராம்நகர் போலீசாரின் ஏற்பாட்டின்பேரில், திருச்சியில் புதைக்கப்பட்ட சங்கீதாவின் உடலை 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கை ராம்நகர் போலீசார் கிடப்பில் போட்டனர். இதையடுத்து ஜான்சிராணி பெங்களூரு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஜான்சிராணி தனது மகள் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார். அதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், “வெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இன்டர்போல் உதவியை நாட வேண்டும்” என்றும் கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தண்டனை கிடைக்கும்

இது குறித்து சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கூறுகையில், “நித்யானந்தா ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் பல்ேவறு சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். எனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெங்களூரு ராம்நகர் போலீசில் அளித்த புகாரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தான் ஏற்றனர். எனது மகளின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தபோது, முக்கிய உறுப்புகள் மாயமானதும், மூளைக்கு பதிலாக துணியை வைத்து இருந்ததும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று ராம்நகர் போலீசார் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனது மகளை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Next Story