நரிக்குடி, அச்சம்பட்டி பகுதிகளை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் - கிராம மக்கள் மனு


நரிக்குடி, அச்சம்பட்டி பகுதிகளை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் - கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:30 PM GMT (Updated: 30 Dec 2019 6:38 PM GMT)

சங்கரன்கோவில் அருகே உள்ள நரிக்குடி, அச்சம்பட்டி பகுதிகளை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சுப்பராஜா மஹாலில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமச்சந்திர பிரபு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கீழக்கடையம் அருகே உள்ள புலவனூர் பகுதி சி.எஸ்.ஐ. ஆலய சபை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்களது ஆலயத்துக்கு முன் பகுதியில் உள்ள பஞ்சாயத்து இடத்தில் தனிநபர் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதற்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து காவல்துறைக்கும், அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களின் நலன் கருதி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதவாறு பாதுகாத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறிஇருந்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனேரி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், தங்களது பகுதி கிராமங்கள் நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தங்களது கிராமங்களை தென்காசி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

செங்கோட்டை நகர பா.ஜ.க. தலைவர் வேம்பு ராஜ் கொடுத்துள்ள மனுவில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சில இஸ்லாமிய அமைப்புகள் செங்கோட்டையில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த போராட்டத்தால் நகரில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்த போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தென்காசி நகர பா.ஜ.க. செயலாளர் சங்கர சுப்பிரமணியன் கொடுத்துள்ள மனுவில், தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் மாசித்திருவிழாவின்போது ரதவீதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. சில ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியும் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. எனவே ரதவீதிகளில் திருவிழா சமயத்தின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாடைகட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்களது ஊரில் அரசு கட்டிடங்கள் கட்டாமல் சிலர் பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பட்டாடைகட்டியில் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட ஆவன செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைப்பதுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் பகுதியைச் சேர்ந்த கிரு‌‌ஷ்ணவேணி தனது மருமகள் மாரீஸ்வரியுடன் வந்து கொடுத்த மனுவில், எனது மகன் கந்தசாமி மஸ்கட் நாட்டிற்கு சென்று ஒரு ஆண்டு ஆகிறது. அங்கு அவருக்கு சரியாக சம்பளம் கொடுக்காமலும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பாமலும் க‌‌ஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எனவே எனது மகனை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை கொடுத்துள்ள மனுவில், வடகரையில் சிலர் சித்தா, ஹோமியோபதி படித்துவிட்டு எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் போல் சிகிச்சையளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் கூறுகையில், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்யும்போது அதற்கு உரிய காரணங்களை பொதுமக்களுக்கு புரியும் வகையில் விளக்கிக் கூறவேண்டும். மனுக்களை தெளிவாகப் படித்து பார்த்து நிறைவேற்ற முடியும் என்றால் தாமதிக்காமல் நிறைவேற்றவேண்டும். தள்ளுபடி செய்யும்போது மீண்டும் அவர்கள் மனு கொடுக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய முறையில் என்ன காரணம் என்று கூறவேண்டும் என்றார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கலெக்டர், மனுக்களை வாங்கினார்.

Next Story