கடும் பனிப்பொழிவால் கருகாமல் இருக்க கேரட் செடிகளுக்கு ‘ஸ்பிரிங்லர்' மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரம்
கோத்தகிரி பகுதியில் கடும் பனிப்பொழிவால் கருகாமல் இருக்க கேரட் செடிகளுக்கு ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி,
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது.
குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, கட்டபெட்டு, வ.உ.சி. நகர், கூக்கல்தொரை, மசக்கல், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக கேரட்டுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வந்தது. இதனால் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். உயர் ரக கேரட் விதைகளை பயிரிட்டு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சி நன்கு பராமரித்து வந்தனர். இதனால் சுமார் 3 மாதத்தில் கேரட் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பனிப்பொழிவில் இருந்து கேரட் செடிகளை பாதுகாக்கும் வகையில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேரட் செடிகள் பனிப்பொழிவால் கருகுவது தடுக்கப்படும். மேலும் விளைச்சலும் குறையாது. இந்த பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக கோத்தகிரி பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. தற்போது மழை முடிந்து, கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்க வேண்டி உள்ளது.
இந்த பனிப்பொழிவால் கேரட் செடிகள் கருகி விட வாய்ப்பு உள்ளது. அதனை தடுக்கும் வகையில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளித்து வருகிறோம். இதை கடைபிடிப்பதால், பனிப்பொழிவின் தாக்கம் செடிகளுக்கு இருக்காது. தற்போது கோத்தகிரி மார்க்கெட்டி கேரட் கிலோவுக்கு ரூ.60-க்கும், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் கிலோவுக்கு ரூ.70-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக உள்ளது. கேரட்டுக்கு நல்ல விலை கிடைப்பதால், கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story