தஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில் சாப்பாடு கிடைக்காமல் பெண் அலுவலர்கள் அவதி வாக்கு எண்ணிக்கை தடைபட்டது


தஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில் சாப்பாடு கிடைக்காமல் பெண் அலுவலர்கள் அவதி வாக்கு எண்ணிக்கை தடைபட்டது
x
தினத்தந்தி 2 Jan 2020 11:00 PM GMT (Updated: 2 Jan 2020 7:27 PM GMT)

தஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில் சாப்பாடு கிடைக்காமல் பெண் அலுவலர்கள் அவதிப்பட்டனர். மேலும் வாக்கு எண்ணிக்கையும் தடைபட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தொடங்கியது. இந்த பணியில் அரசு ஆசிரியர்கள், அலுவலர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆண்களை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக பெண்கள் வாக்கு எண்ணும் பணியில் நியமிக்கப்பட்டனர். ஆனால் பள்ளி வளாகத்தில் 2 இடங்களில் மட்டுமே கழிவறை இருந்ததால் பெண் அலுவலர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு காலை 8 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. சாப்பிடக்கூட இடவசதி செய்யப்படாததால் கையில் வைத்துக்கொண்டு நின்றபடியே அவர்கள் சாப்பிட்டனர். கை கழுவ ஒரே ஒரு இடத்தில் தண்ணீர் குழாய் இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாயில் கை கழுவி சென்றனர். மதிய சாப்பாடு மதியம் 2 மணி வரை வழங்கப்படவில்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேரத்திற்கு சாப்பிட முடியாததால் மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தடை

மதியம் 2.30 மணிக்கு உணவு பொட்டலம் கொண்டு வரப்பட்டது. இதை பார்த்தவுடன் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு உணவு பொட்டலத்தை வாங்க முயற்சி செய்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. ஒரு பொட்டலத்தை பலர் வாங்கியதால் அந்த பொட்டலம் கிழிந்து உணவு கீழே சிதறியது. பின்னர் போலீசார் வந்து கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தி உணவு பொட்டலங்களை அலுவலர்களுக்கு வழங்கினர்.

100-க்கும் மேற்பட்டோருக்கு உணவு கிடைக்கவில்லை. இவர்களில் ஆண்கள் சிலர், கடைகளுக்கு சென்று சாப்பிட்டனர். ஆனால் பெண்கள் உணவு இல்லாமல் வாக்கு எண்ணும் அறைக்கு சென்றனர். தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு தங்களது பசியை போக்கினர். வெளியே கடைகளுக்கு அலுவலர்கள் சென்றதால் 1 மணிநேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.



Next Story