புதுவையில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்


புதுவையில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Jan 2020 11:30 PM GMT (Updated: 3 Jan 2020 10:56 PM GMT)

புதுவையில் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி புதுவை-கடலூர் சாலையில் உள்ள அந்தோணியார் மகாலில் நடைபெற்று வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் விழா மலரை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி நகர அமைப்பு குழும தலைவர் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ,, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் ராகவன், புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், கண்காட்சி கமிட்டி தலைவர் அறிவழகன், புதுச்சேரி கட்டிட பொறியாளர் சங்க தலைவர் அண்ணாமலை, பொருளாளர் மதிவாணன், துணைத்தலைவர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து கண்காட்சி கமிட்டி தலைவர் அறிவழகன் கூறும் போது, ‘கண்காட்சியில் 110 அரங்குகள் (ஸ்டால்கள்) அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் கட்டிட பொருட்கள் தயாரிப்பாளர்கள், பலதரப்பட்ட கட்டுமான தொழில் சார்ந்த சேவை நிறுவனங்கள், கட்டிட தொழில் அபிவிருத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவன பொருட்கள், எந்திரங்கள் மற்றும் கட்டிட உபயோக சாதனங்களை கண்காட்சியாக வைத்துள்ளனர்.

மேலும் சிமெண்டு, மாற்று மணல், செங்கற்களால் ஆன மாற்று கட்டுமான பொருட்கள், பெயிண்ட் வகைகள், நீர்க்கசிவை தடுக்கும் வேதி பொருட்கள், உள் மற்றும் வெளி அலங்கார அமைப்புகள் உள்பட கட்டிட கட்டுமான தேவைகள் அனைத்திற்கும் பயன்படும் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Next Story