மராட்டியத்தில் புதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் இலாகா ஒதுக்கப்படும் - நவாப் மாலிக் பேட்டி


மராட்டியத்தில் புதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் இலாகா ஒதுக்கப்படும் - நவாப் மாலிக் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2020 12:12 AM GMT (Updated: 5 Jan 2020 12:12 AM GMT)

புதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் இலாகா ஒதுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. கடந்த நவம்பர் மாதம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இதன்பின்னர் ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த டிசம்பர் 30-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 3 கட்சிகளை சேர்ந்த 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

தற்போது மராட்டிய மந்திரிசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோரை சேர்த்து மொத்தம் 43 மந்திரிகள் உள்ளனர்.

மந்திரிசபையில் ஏற்கனவே 3 கட்சிகளுக்கும் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், அந்த இலாகாக்களை தொடக்கத்தில் பதவி ஏற்ற 6 மந்திரிகள் கவனித்து வருகின்றனர். புதிய மந்திரிகளுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.

கிராமப்புற மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி விவசாயம், கூட்டுறவு, ஊரக மேம்பாடு உள்ளிட்ட இலாகாக்களை கேட்கிறது. ஆனால் தற்போது அந்த துறைகள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா வசம் உள்ளன. இதனால் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் 3 கட்சிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய மந்திரிகளுக்கு இலாக்காக்களை ஒதுக்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நேற்று தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய இலாகாக்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவதற்கு நேரம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் இல்லை.

திங்கட்கிழமைக்குள் (நாளை) மந்திரிகளுக்கு நிச்சயமாக இலாகாக்கள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story