ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்


ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 7:27 PM GMT)

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்‘ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் 100 சதவீதம் நிறைவேற்றினார். இதனால்தான் 2016-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவித்திடாத திட்டமான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.100 வழங்கும் திட்டத்தையும் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அத்தனை திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர், பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.100 வழங்கியதை, ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்‘ திரைப்படத்தில் பின்னணி இசை சேர்ப்புக்கு தமிழக கலைஞர்களை புறக்கணித்து, வெளிநாட்டு கலைஞர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அந்த திரைப்படத்துக்கு விளம்பரத்தை தேடி தருவதாகவே அமையும். ஒரு திரைப்படத்தில் யார் பணி புரியலாம்? என்பது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரின் விருப்பம் ஆகும். இதில் அரசு தலையிடுவது திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்து விடும்.

திரைப்படத் துறையில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் அவர்களுக்காக ‘பெப்சி‘ போன்ற பல்வேறு சங்கங்களும் உள்ளன. எனவே, தர்பார் திரைப்படத்தை தயாரித்தபோதே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து, இசை கலைஞர் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.

‘தர்பார்‘ திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரையிலும் அரசிடம் விண்ணப்பிக்கவில்லை. வழக்கமாக ஓரிரு நாட்களுக்கு முன்னதாக சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரின் திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் அரசு எந்த பாகுபாடும் பார்த்தது கிடையாது. ‘தர்பார்’ திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அதன் தயாரிப்பாளர் அரசுக்கு விண்ணப்பிக்கும்போது, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று ஆலோசித்து பரிசீலிக்கப்படும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் என்று பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் கூறுவது, கன்னியாகுமரி மாவட்டத்தை மட்டும் மனதில் வைத்து அவர் கூறி இருக்கலாம் என்பது எனது கருத்து.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்

Next Story