தொழிலில் நஷ்டம், கடன்காரர்கள் நெருக்கடி: நகை அடகு கடையில் கொள்ளை போனதாக உரிமையாளர் நாடகம் ஆடியது அம்பலம் - போலீசார் தொடர்ந்து விசாரணை


தொழிலில் நஷ்டம், கடன்காரர்கள் நெருக்கடி: நகை அடகு கடையில் கொள்ளை போனதாக உரிமையாளர் நாடகம் ஆடியது அம்பலம் - போலீசார் தொடர்ந்து விசாரணை
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 10:51 PM GMT)

தொழிலில் நஷ்டம் மற்றும் கடன்காரர்கள் நெருக்கடியால் நகை அடகு கடையில் 8 கிலோ தங்கநகை கொள்ளை போனதாக உரிமையாளர் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, 

புதுச்சேரி 45 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் குமார் ஜெயின் (வயது 51). இவர் திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் வீதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். அவரது மகன் சுரப் ஜெயின் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காலை ராகேஷ் குமார் ஜெயின் வழக்கம் போல் கடைக்கு சென்றார். அப்போது கடையில் இருந்த பூட்டுகள் அனைத்தும் திறக்கப்பட்டு 3 கதவுகள் மற்றும் ஒரு லாக்கர் திறந்து கிடந்தது. அதில் இருந்து ரூ.2½ கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று அவர் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கொள்ளை நடந்த கடை உள்ள பகுதி இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடம் ஆகும். அந்த கடையில் மொத்தம் 14 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் நவீன பூட்டுகள். எனவே ஒரே நேரத்தில் 14 பூட்டுகளுக்கும் கள்ளச்சாவி தயாரித்து அதனை திறந்து கொள்ளையடிப்பது என்பது இயலாத காரியம் என போலீசார் கருதினர்.

எனவே அந்த அடகு கடையில் கொள்ளை நடந்தது உண்மைதானா? அடகு கடை உரிமையாளர்கள் கொள்ளை நடந்தது போல நாடகம் நடத்துகின்றனரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார், அந்த அடகு கடை உரிமையாளர் ராகேஷ் குமார் ஜெயின் மற்றும் அவரது மகன் சுரப் ஜெயின் ஆகிய 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் அவர்களிடம், நகை அடகு கடையில் யார்? யார்? நகைகளை அடகு வைத்துள்ளனர் என்று கேட்டனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். அதனை தொடர்ந்து நகை அடகு வைத்தவர்கள் விவரம் அடங்கிய பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதில் பலர் நகை அடகு வைத்ததுபோல போலியாக முகவரிகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த நகை அடகு கடையின் அருகில் உள்ள கடைகளிலும் விசாரணை நடத்தினர். அப்போது ராகேஷ் குமார் ஜெயினின் கடைக்கு நகைகளை அடகு வைக்க அதிக அளவில் மக்கள் வரமாட்டார்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் ராகேஷ் குமார் ஜெயினிடம் தொடர்ந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் ரூ.50 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். எனவே இந்த நகை கொள்ளை நாடகமாடி அதில் இருந்து வரும் இன்சூரன்ஸ் தொகையை வைத்து பிரச்சினைகளை சமாளித்துவிடலாம் என்று திட்டமிட்டது அம்பலமாகியது.

அதற்காக கடந்த 7 மாதங்களாக நகை அடகு வைத்தவர்கள் பட்டியலை அவர் போலியாக தயாரித்து வந்துள்ளார் என்பதும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார், ராகேஷ் குமார் ஜெயினிடமும், அவரது மகன் சுரப் ஜெயினிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story