தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு


தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 5:00 AM IST (Updated: 7 Jan 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதாகவும், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிப்பதாகவும் சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் வேகமாக வளர்ந்து, சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கின்றது. 45 கிலோ மீட்டர் நீளத்திற்கான சென்னை மெட்ரோ ரெயிலின் முதற்கட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான முதற்கட்டத்தின் நீட்டிப்பு பணிகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும்.

மேலும், ரூ.69,180 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களை அமைக்கும் 2-ம் கட்ட திட்டப் பணிகளை செயல்படுத்த அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட பணியில், 52.01 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிதியுதவி அளித்திட ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்து, முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரண்டாம் கட்டத்தின் மீதமுள்ள வழித்தடங்களுக்காக, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்டத்தில், 50 சதவீத பங்குமூலதன தொகையை மத்திய அரசு வழங்கியதை போலவே, 2-ம் கட்ட திட்டத்திலும் 50 சதவீதம் பங்களிப்பிற்கான ஒப்புதலை விரைவில் வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, புதிய புறநகர் பஸ் நிலையம் அமையவிருக்கும் கிளாம்பாக்கம் வரையிலான 15.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தாம்பரம் - வேளச்சேரி வழித்தடத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு, 15.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரெயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story