பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2020 4:00 AM IST (Updated: 8 Jan 2020 9:49 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில், தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 

ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறை வேலைவாய்ப்புகளை தனியார் மயமாக்ககூடாது, தொழிலாளர்களின் சட்டம் 44-ஐ நான்கு பிரிவாக மத்திய அரசு பிரித்துள்ளது. இந்த சட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதனை வாபஸ் வாங்க வேண்டும், அதிக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று அகில இந்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு. மற்றும் ஐ.என்.டி.யு.சி. ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகேசன், ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் அம்பளவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தொழிற்சங்கத்தினர் கோவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 283 பேரையும் கைது செய்தனர்.

கரூர் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு வரவில்லை. இருப்பினும் வழக்கம்போல் காலை முதலே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கரூர் நகருக்குள் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் ஒரு சிலர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட போதிலும், கரூர் பஸ் நிலையம், பழைய பைபாஸ் ரோடு, ஜவகர்பஜார், சர்ச்கார்னர், வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் அவைகள் வழக்கம்போல் இயங்கின.

இதேபோல மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கரூர் கிளை சார்பில் கரூர்-கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, அதன் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், மின்சார பயன்பாடு அளவை கணக்கீடு செய்தல், பழுதடைந்த மின்கம்பம், மின்மாற்றியை மாற்றி சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டன.

இதேபோல கரூர் கோட்டம் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல், பதிவு தபால்களை அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தபால் நிலையம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதேபோன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி மற்றும் எல்.ஐ.சி. ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறையை சேர்ந்த வங்கி கிளைகளின் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு வராததால் வங்கியில் கணக்கு தொடங்குதல், பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியதை காண முடிந்தது.

இதேபோன்று கரூர் மாவட்ட காந்திமகான் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நலசங்கத்தின் சார்பில் நகரில் உள்ள அனைத்து பழுது நீக்கும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கரூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளித்தலை-அரவக்குறிச்சி

குளித்தலையில் தொழிற்சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 84 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் மாலை வரை தங்கவைத்தனர். முன்னதாக மறியலில் ஈடுபட்டவர்கள் குளித்தலை காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையத்திற்கு வர முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் காந்திசிலை அருகே அவர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் போலீசார் தடுப்பையும் மீறி ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. குளித்தலையில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் பள்ளப்பட்டியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியலில் ஈடுபட்ட 65 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்தனர்

Next Story