அவினாசி அருகே, கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது - மாணவர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு


அவினாசி அருகே, கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது - மாணவர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:30 PM GMT (Updated: 9 Jan 2020 5:24 PM GMT)

அவினாசி அருகே கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது. மாணவர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பூர்,

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வெள்ளமடையில் திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அவினாசி, அன்னூர் சுற்றுவட்டார கிராம பகுதி மாணவ-மாணவிகள் தினமும் கல்லூரி பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த பஸ்சை அவினாசி நம்பியாம்பாளையத்தை சேர்ந்த நாராயணசாமி (வயது 60) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் மாணவ-மாணவிகளை அழைத்து செல்வதற்காக டிரைவர் நாராயணசாமி கல்லூரி பஸ்சை அவினாசி அருகே கருவலூரில் இருந்து கல்லூரிக்கு ஓட்டி சென்றார். கானூரில் வழக்கமாக ஏறும் மாணவர் நேற்று வரவில்லை. இதையடுத்து செட்டிபுதூரில் பேராசிரியர் அருண்குமார் என்பவர் பஸ்சில் ஏறினார். பஸ்சில் டிரைவர், கிளீனர், பேராசிரியர் ஆகிய 3 பேர் இருந்தனர். காலை 8 மணியளவில் பஸ் அவினாசியை அடுத்த சேவூர் அருகே மொண்டிபாளையத்தில் உள்ள ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென்று நின்று விட்டது.

இதையடுத்து பஸ்சை சரி செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். பஸ்சில் இருந்த டீசலை பம்ப் செய்தும், மற்றொரு வாகனத்தில் இருந்து பேட்டரியை எடுத்து வந்தும் பஸ்சை ஓட்ட முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது காலை 11 மணி அளவில் பஸ்சின் புகை குழாய் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

உடனே பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் அங்கிருந்து இறங்கி வெளியே ஓடினார்கள். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பஸ் முழுவதும் எரிந்தது.

இது குறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பஸ் முழுவதும்எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளித்தது. நல்லவேளையாக பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பயணம்செய்யாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் அவினாசி தாசில்தார் சாந்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story