கங்கைகொண்டானில் மனுநீதி நாள் முகாம்: 113 பேருக்கு ரூ.47¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி - கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்


கங்கைகொண்டானில் மனுநீதி நாள் முகாம்: 113 பேருக்கு ரூ.47¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி - கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 9 Jan 2020 5:53 PM GMT)

கங்கைகொண்டானில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 113 பேருக்கு ரூ.47¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, அங்கு தோட்டக்கலைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் வாயிலாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் ‌ஷில்பா பேசியதாவது:-

மக்களை தேடி அரசு என்ற அடிப்படையில் மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று அவர்களது குறைகள் மற்றும் தேவைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு அளிக்கக்கூடிய மனுநீதி நாள் முகாம் ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த மனுநீதி நாள் முகாமில் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் அவர்களது துறை வாயிலாக வழங்கப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எப்படி பெறுவது என்பது குறித்து விளக்கமளித்தனர். இந்த விவரங்களை கேட்டறிந்து பலன்களை பெற்று பயன்பெற வேண்டும்.

மேலும் தங்கள் பள்ளி வயது குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் சத்தான காய்கறி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்து காய்கறி விதைகளையும் 100 சதவீத அரசு மானியத்தில் வழங்கப்படுகிறது. அவற்றை பெற்று அனைவரும் வீட்டு தோட்டங்களிலும் காய்கறி பயிரிட்டு உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 237 மனுக்கள் பெறப்பட்டு 124 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாய்த்துறை மூலம் 55 பேருக்கு ரூ.39 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலும், சமூகநலத்துறை மூலம் 19 பேருக்கு ரூ.19 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் துறை மூலம் 8 பேருக்கு குடும்ப அட்டைகளும், வேளாண்மைத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை மூலம் 12 பேருக்கு ரூ.73 ஆயிரத்து 690 மதிப்பிலும், வளர்ச்சித்துறை மூலம் 4 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 113 பேருக்கு ரூ.47 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.

முகாமில் நெல்லை உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வ‌ஷீத் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கிரு‌‌ஷ்ணபிள்ளை, நெல்லை தாசில்தார் ராஜேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story