நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு


நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:30 AM IST (Updated: 9 Jan 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக அவர் மீது மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஜாமீன் கேட்டு நெல்லை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வக்கீல் பிரம்மா, நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் கடந்த 7-ந்தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த மனு மீதான விசாரணையை 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, அரசு தரப்பில் சில ஆவணங்களை சரிபார்க்க வேண்டி உள்ளது, எனவே, காலஅவகாசம் தேவை என்று கேட்டார். இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தார்.

Next Story