மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 9 Jan 2020 5:53 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்று சிறப்பு முகாமில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.

குடியாத்தம்,

குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பொறுப்பு) எஸ்.தினகரன், சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் காமராஜ், மாற்றுத்திறனாளி மறுவாழ்வு அலுவலர் பாபு, மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரி, தாசில்தார்கள் வத்சலா, விஜயன், கோபி, ரமே‌‌ஷ், நகராட்சி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த வாரிசுதாரர்களுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் காசோலை வழங்கியும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவிதொகை பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 5 வயதிற்கு உட்பட்ட உடல் குறைபாடு உள்ள குழந்தைகளை பதிவு செய்ய வேண்டும். அந்த குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரிவில் இதுவரை 1400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 80 சதவீதம் அளவில் தங்களது குறைபாடுகளில் இருந்து மீண்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், மாணவர்களுக்கு கூடுதலாக கல்வி உதவித்தொகை, வீல் சேர், செயற்கை கால், 3 சக்கர ஸ்கூட்டி உள்பட பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாணவர்களுக்கு வயது வரம்பு தளர்த்துதல், மருத்துவர்களின் சான்றிதழ் வழங்குதல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமிலேயே வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை கீதா உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story