பொள்ளாச்சி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தாத்தா கைது
பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாத்தாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 53). இவர் ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சிறுமிக்கு தாத்தா முறை என்பதால் பொன்னுச்சாமி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தாய் மார்க்கெட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் அந்த சிறுமி மட்டும் தனியாக இருந்தார். இதை அறிந்த பொன்னுச்சாமி வீட்டிற்கு சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதற்கிடையில் மார்க்கெட்டுக்கு சென்ற தாயும் வீட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி கண்ணீருடன் தாயுடன் கூறினார். இதற்கிடையில் பொன்னுச்சாமி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் பொன்னுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சியில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பொன்னுச்சாமியை இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையில் போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story