சீகூர் வனப்பகுதியில், செந்நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


சீகூர் வனப்பகுதியில், செந்நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:00 PM GMT (Updated: 9 Jan 2020 8:01 PM GMT)

சீகூர் வனப்பகுதியில் செந்நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மசினகுடி,

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது சீகூர் வனப்பகுதி. இங்கு காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் என பல்வேறு வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிகளில் வாழக்கூடிய அரிய வகை செந்நாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றுக்கு பிடித்த உணவான புள்ளி மான்கள், கடமான்கள், சருகுமான்கள், சுருள் கொம்பு மான்கள் சீகூர் வனப்பகுதியில் அதிகமாக உள்ளன. இதனால் செந்நாய்கள் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.

செந்நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை போல தோற்றம் கொண்டு உள்ளன. ஆனால் அவற்றின் உடல் செம்மண் நிறத்திலும், வால் பகுதி கருமை நிறத்திலும் இருக்கும். மனிதர்களை கண்டாலே வனப்பகுதிக்குள் ஓடி மறைந்து கொள்ளும் தன்மை கொண்டவை. அவை அதிகாலை நேரங்களில் வெளியே வந்து, தொலை தூரம் வரை கூட சென்று மான்களை வேட்டையாடும் திறனை கொண்டு உள்ளன. குறிப்பாக ஒரு மானை வேட்டையாடி, அடுத்த சில மணி நேரங்களில் அதன் உடலை சாப்பிட்டு முடித்து விடுகின்றன. அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள குகைகள், பாறைகளில் மறைவாக வாழும் இந்த செந்நாய்கள், மாயார் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.

சீகூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் செந்நாய்களை வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் ஆனைகட்டி, சிறியூர் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் செந்நாய்கள் வேட்டையாடுவதை நேரில் காண்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

செந்நாய்கள் பெரும்பாலும் கூட்டமாக வாழக்கூடிய வனவிலங்குகள் ஆகும். ஒரு கூட்டத்தில் 10 முதல் 30 செந்நாய்கள் இருக்கும். வேட்டையாடும்போது ஒன்றாக இணைந்து வேட்டையாடும். மனிதர்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வனப்பகுதியில் வாழக்கூடியவை. அவைகளின் எண்ணிக்கை குறையாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story